Latestமலேசியா

தந்தையைக் கொலை செய்ததாக கணவன், மனைவி மீது குற்றச்சாட்டு

சிரம்பான், நவ.17-63 வயதுடைய கே. பாலகிருஷ்ணன் என்ற முதியவரைக் கொலை செய்ததாக அவரது மகன் பி. பாலமுரளி, 32, மற்றும் மருமகள் எஸ். சங்கீதா, 34, ஆகியோர் மீது இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302, பிரிவு 34 ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கடந்த நவம்பர் 3ஆம் தேதி இரவு 11 மணியளவில் Rasah Jayaவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அக்கொலை நிகழ்ந்ததாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது சாகும்வரை தூக்கு தண்டனை விதிக்கப்படலாம். சாகும்வரை தூக்கு தண்டனை விதிக்கப்படாவிட்டால் குறைந்தது 12 பிரம்படிகள் வழங்கப்படலாம்.

அரசு தரப்பு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் இருவருக்கும் பிணை அளிக்க மறுத்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கும் நிலையில், வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முதியவர் ஒருவர் துன்புறுத்தப்படும் காணொளி முன்னதாக டிக்டாக்கில் வைரலானதைத் தொடர்ந்து அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அக்காணொளியைக் கண்ட அரசு சாரா அமைப்பொன்றைச் சேர்ந்த நபர் ஒருவர், உண்மை நிலையை அறிய சம்பவ இடத்திற்குச் சென்றபோது, இறுதிச் சடங்கு நடைபெறுவதைக் கண்டார். வைரலான காணொளியில் துன்புறுத்தப்பட்ட நபர்தான் உயிரிழந்தவர் என்பதையும் கண்டறிந்தார்.

இறுதிச் சடங்குகள் மிகவும் அவசர அவசரமாக நடத்தப்பட்டதால் சந்தேகம் எழுந்த நிலையில், காவல் துறையின் உதவியுடன் அச்சடங்குகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!