Latestமலேசியா

பெரானாங் தம்பதி மரணம்: இணையவழி பகடிவதை குறித்து ராயர் கேள்வி; சமூக ஊடக நிறுவனங்களின் பொறுப்பை வலியுறுத்திய ஃபாஹ்மி

கோலாலம்பூர், நவம்பர் 17 – சிலாங்கூர், பெரானாங், பண்டார் தாசிக் கெசுமாவிலுள்ள இரட்டை மாடி வீட்டின் மாடிப் பகுதியில், யோகன் மற்றும் ராஜேஷ்வரி என்ற கணவன், மனைவி இருவரும் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெவ்வேறு அறைகளில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

புகைப்படச் சேவை நிறுவனமான ஃபீனிக்ஸ் பிக்சல்ஸ் (Phoenix Pixels) நிறுவனத்தை நடத்தி வந்த இவர்கள், உயிரிழப்பதற்கு முந்தைய இரண்டு வாரங்களாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும் இணையவழித் துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டிருந்துள்ளனர். எனினும், இவற்றுக்கும் அவர்களின் மரணத்திற்கும் தொடர்பு இருப்பதைப் போலீசார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இந்தச் சம்பவத்தையும் இணையவழி பகடிவதைப் பிரச்சினையையும் சுட்டிக்காட்டி, ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் (RSN Rayer), நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் (Fahmi Fadzil), இணையவழி பகடிவதையைத் தடுப்பது குறித்து வரும் டிசம்பர் மாத மத்தியில் சிங்கப்பூரில் சமூக ஊடகத் தளங்களின் நிர்வாகிகளுடன் மலேசிய அரசாங்கம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இணையவழி பகடிவதைச் சம்பவங்களைத் தடுப்பதில் சமூக ஊடக நிறுவனங்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, நேரலை ஒளிபரப்புகளின்போது இத்தகைய துன்புறுத்தல்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்றும் ஃபஹ்மி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!