Latestமலேசியா

முஸ்லீம் அல்லாத தலைவர்கள் கொடுமையானவர்கள் என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள்; ஹாடி அவாங்கிற்கு ராயர் சவால்

கோலாலம்பூர், நவம்பர்-18,முஸ்லீம் அல்லாத தலைவர்கள், முஸ்லீம் தலைவர்களை விடக் கொடுமையானவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் காட்டுமாறு, பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிற்கு, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் சவால் விடுத்துள்ளார்.

ஹாடி அவாங்கின் சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கமளிக்க வேண்டுமென ராயர் நேற்று மக்களவையில் வலியுறுத்தினார்.

தமது ஜெலுத்தோங் தொகுதியில், இனம் மற்றும் மத வேறுபாடின்றி அனைவருக்கும் உதவிகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 21 வியாபாரிகளுக்குத் தலா ஆயிரம் ரிங்கிட் உதவி வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வேளையில், மாராங் எம்.பியுமான ஹாடி அவாங்கின் கருத்து தொடர்பில் ம.இ.கா, ம.சீ.ச, கெராக்கான் மற்றும் MIPP கட்சிகளின் தலைவர்கள் மௌனம் காப்பது ஏன் என்றும் ராயர் கேள்வி எழுப்பினார்.

அக்கட்சிகளின் தலைவர்கள் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும், முஸ்லீம்களின் ஆட்சி, முஸ்லீம் அல்லாதவர்களின் ஆட்சியை விட கொடுமையானதாக இருக்காது என ஹாடி அவாங், மலாக்கா மாநிலத் தேர்தலை ஒட்டிய பிரச்சாரத்தில் பேசியதாக மலேசியா கினி செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

எனினும், ஹாடியின் கருத்துகள் தவறான சூழலில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக பாஸ் கட்சி பின்னர் விளக்கமளித்தது.

இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லீம் அல்லாதவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்பதையே ஹாடி வலியுறுத்தியதாக அக்கட்சி கூறிக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!