
குவாலா கங்சார், நவம்பர்-19,பேராக், குவாலா கங்சாரில் உள்ள தங்கும் விடுதிப் பள்ளியொன்றில், மூன்றாம் படிவ மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
மாணவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, முழுமையான, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
நீதி நிலைநாட்டப்படுவதோடு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கப்படுவதையும் உறுதிச் செய்ய, விசாரணையில் எந்தவோர் அம்சமும் புறக்கணிக்கப்படக் கூடாது என அன்வார் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிலையில், நேற்று நவம்பர் 18-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பேராக் மாநிலக் கல்வி இலாகா, போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு உத்தரவிட்டுள்ளது.
மாணவரின் உடல் சவப் பரிசோதனைக்காக தைப்பிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு உளவியல் ஆலோசனைகளும் மனநல ஆதரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, மாணவரின் மரணம் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாமெனவும், குடும்பத்தினரின் தனியுரிமையை மதிக்குமாறும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மாணவரின் மரணத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.



