
தங்காக், நவ.19-ஜோகூர், தங்காக்கில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில், 2ஆம் படிவ மாணவர் ஒருவர் மூன்று மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்ட செய்திகள் தொடர்பாக ஏற்பட்ட தவறான புரிதலே அதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
கடந்த நவம்பர் 13ஆம் தேதி காலை 8 மணியளவில் வகுப்பறையில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 15 வயதுடைய மூன்று மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவரைத் தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அது குறித்து நவம்பர் 14ஆம் தேதி காவல்துறைக்குப் புகார் கிடைத்ததாக தங்காக் மாவட்டக் காவல் துறைத் தலைவர் Superintendent Mohd Roslan Talib தெரிவித்தார். காயமடைந்த மாணவர் முவாரில் உள்ள சுல்தானா பாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அம்மாணவரின் தலை, மார்பு, வயிறு மற்றும் இடது கையில் காயங்கள் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
இவ்வேளையில், அத்தாக்குதலில் தொடர்புடைய மூன்று மாணவர்களை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். வாட்ஸ்அப் குழு உரையாடலில் ஏற்பட்ட தவறான புரிதலே தாக்குதலுக்குக் காரணம் என்றும், மூவரும் தங்கள் ஈடுபாட்டை ஒப்புக் கொண்டதாகவும் Mohd Roslan குறிப்பிட்டார்.
அச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 323-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தொடர்பான பகடி வதை மற்றும் வன்முறை சம்பவங்களைத் தீவிரமாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், பெற்றோர்களும் பள்ளிகளும் மாணவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.



