
கோலாலம்பூர்- ஆசிய சாம்பியன்ஸ் டிராபி – Asian Champions Trophy (ACT) 2026 ஹாக்கிப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் சீனாவை வீழ்த்தி வெற்றி பெற முடியும் என மலேசிய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் சி.ஆர். குமார் (CR Kumar) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில், மலேசிய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த போதிலும், நாளை நடைபெறவுள்ள சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் வீராங்கனைகள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என அவர் கூறினார்.
இதனிடையே, இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்துப் பேசிய அவர், முதல் இரண்டு கால்பகுதிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததாகவும், இடைவேளைக்குப் பிறகு மலேசிய வீராங்கனைகள் ஆட்டத்தின் வேகத்தைத் தக்கவைக்கத் தவறியதாகவும் கூறினார்.
மேலும், விளையாட்டு நுட்ப அம்சங்களில் வீராங்கனைகள் கூடுதல் கவனம் செலுத்தினால், அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றும், சீனாவை தோற்கடித்து, அரையிறுதிக்கான வாய்ப்பையும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றும் குமார் தெரிவித்தார்.
மலேசியா – சீனா அணிகள் மோதும் ஆட்டம் நாளை மலேசிய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.



