
பெட்டாலிங் ஜெயா, நவ.20-சன்வே குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான Tan Sri Dr Jeffrey Cheah, கல்வி அறக்கட்டளை நிதிக்காக 500 மில்லியன் ரிங்கிட் வழங்க உறுதியளித்துள்ளார். அதன் மூலம் தகுதியான மாணவர்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பயனடையவிருக்கின்றனர்.
2030ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 100 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படவிருக்கிறது. அந்நிதி, சன்வே பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சி, கல்வித் திறன் மேம்பாடு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு நிலையான ஆதரவை வழங்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத் தலைமுறையினருக்கும் கல்வி வாய்ப்புகள் தொடர்ந்து கிடைப்பதை இந்த அறக்கட்டளை உறுதி செய்யும் என Jeffrey Cheah கூறினார். தாம் மறைந்த பின்னரும் தகுதியான இளையோருக்கு இந்த நிதி வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Harvard பல்கலைக்கழகம் போன்ற உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிதி மாதிரியைப் பின்பற்றி, நீண்டகால முதலீடுகள் மற்றும் முறையான நிர்வாகத்தின் மூலம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு நிலையான ஆதரவை வழங்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, Jeffrey Cheah அறக்கட்டளை இவ்வாண்டு 82.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளையும் மானியங்களையும் வழங்கியுள்ளது. அதன் வழி அறக்கட்டளையின் ஒட்டுமொத்த நிதிப் பங்களிப்பு 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் Jeffrey Cheah அறக்கட்டளையின் 2026-ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் அவர் அவ்வாறு கூறினார். துணைப் பிரதமர் Datuk Fadillah Yusofவும் அந்நிகழ்வில் கலந்து கொண்டார்.



