Latestஇந்தியா

அரசியல் களத்தில் திரிஷா? ‘இளைய புரட்சித்தலைவி’ பேரவை தொடக்கம்!

திருநெல்வேலி, நவ.24-தமிழ்த் திரையுலகில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகையாக வலம் வரும் திரிஷாவின் பெயரில், திருநெல்வேலியில் ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனால் நடிகை திரிஷா அரசியலில் களமிறங்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பும் விவாதமும் மீண்டும் சூடுபிடித்துள்ளன.

திருநெல்வேலியில் பேரவையின் அறிமுக நிகழ்ச்சியில், அதன் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ராஜகோபால், நிர்வாகிகளுடன் இணைந்து அமைப்பின் சின்னத்தை வெளியிட்டார். பச்சை நிற உடையில் திரிஷா இடம் பெற்றுள்ள அந்தச் சின்னத்தில், ‘பதவிக்காக அல்ல; தமிழக மக்களின் உரிமைக்காக’ என்ற வாசகமும் உள்ளது. மேலும், பேரவை நிர்வாகிகள் அவருக்கு ‘இளைய புரட்சித்தலைவி’ என்ற பட்டத்தையும் அறிவித்துள்ளனர்.

நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படவுள்ள அப்பேரவை, மாவட்டம் தோறும் மருத்துவ முகாம்கள், சட்ட உதவி முகாம்கள், மரம் நடுதல் உள்ளிட்ட சமூக நலப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவித்து உதவி பெறும் வகையில் இணையதளம் ஒன்றையும் உருவாக்கவுள்ளதாக ராஜகோபால் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்த அமைப்பைத் தொடங்குவது குறித்து திரிஷாவிடம் இதுவரை தெரிவிக்கவில்லை. அவரிடம் அனுமதி பெறப்படவில்லை என்றாலும் தங்களது சமூகப் பணிகள் தொடரும் என ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையில் திரிஷாவின் பெயரில் நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு, அவரை அரசியலுக்கு வரவேற்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தற்போது திருநெல்வேலியிலும் புதிய பேரவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், திரிஷாவின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் மீண்டும் எழுந்துள்ளன. எனினும், அரசியலில் ஈடுபடுவது குறித்தோ, அப்பேரவைக்கு ஒப்புதல் அளித்தது குறித்தோ திரிஷா இதுவரை நேரடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!