
கூலிம், நவம்பர் 24 – சிவப்பு போக்குவரத்து விளக்கை மீறிச் சென்ற Tesla கார் மோதியதில், புரோட்டோன் சாகா காரை ஓட்டிச் சென்ற 39 வயது பெண் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு, கெடா தொழில்நுட்பப் பூங்கா (KHTP), ஜாலான் KHTP 1-இல் உள்ள சிம்பாங் 4 கிலாங் ஸ்காட் (Simpang 4 Kilang Schott) அருகே இவ்விபத்து நிகழ்ந்தது. உயிரிழந்தவர் அதே பகுதியிலுள்ள தொழிற்சாலையில் பணிபுரிபவர் ஆவார். தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
29 வயதுடைய Tesla கார் ஓட்டுநரின் வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படுவதால், கைது செய்யப்பட்டு கூலிம் மருத்துவமனையில் மது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக கூலிம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பிரண்டெண்ட் சியாம்சுல் சின்ரிங் (Superintendan Syamsul Sinring) தெரிவித்தார். மேலும், சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.



