
பினாங்கு, ஜூன்-23 – செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்களைப் பரப்பி, தலைவர் லிம் குவான் எங்கின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சிகளை நிறுத்த வேண்டும் என செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
“Inside_Malaysia” என்ற பெயரில் இயங்கும் @rebel.dynasty69_ என்ற டிக்டோக் கணக்கின் மூலம் அவதூறு தன்மை கொண்ட உள்ளடக்கங்கள் பரப்பப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
கடந்த ஜூன் 14ஆம் தேதி பட்டர்வொர்த், தாமான் செகெமாலில் நடைபெற்ற டிராகன் படகு திருவிழா (Dragon Boat Festival) நிகழ்ச்சி, பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்காக நடத்தப்பட்டு வரும் வருடாந்திர நிகழ்ச்சியாகும் என்றும், பெரும்பான்மையாக முஸ்லிம் அல்லாத மக்கள் வசிக்கும் பகுதியில் சீன சமூகத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இதுவரை எந்தப் பிரச்சினையும் எழுந்ததில்லை.
இந்நிலையில், ஒரு மலாய் பெண் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதாகத் தோற்றமளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளதாகவும், இது பொதுமக்களை தவறாக வழிநடத்துவதோடு இன, மத நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக லிம் குவான் எங்கின் அலுவலகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட டிக்டோக் கணக்கு உரிமையாளர் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பிய மற்ற நபர்கள் மீது போலிஸ், MCMC விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
எனவே, வெறுப்பு அரசியல் மற்றும் மலிவான விளம்பர உத்திகளை அனைவரும் கைவிட வேண்டும் என்றும், மதம் மற்றும் AI தொழில்நுட்பத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.



