Latestமலேசியா

Cikgu Chandra & Zamri Vinoth இருவருக்கும் எதிராக ம.இ.கா இளைஞர் பிரிவு போலீசில் புகார்; நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுமாறும் வலியுறுத்தல்

கோலாலம்பூர், மார்ச் 31 – பேச்சுரிமை என்ற பெயரில் இன- மத விஷயங்களை பொது வெளியில் கொண்டு வந்து தேவையற்ற சர்ச்சையைக் கிளப்பியதாக கூறி இருவருக்கு எதிராக ம.இ.கா இளைஞர் பிரிவு போலீசில் புகார் செய்திருக்கிறது.

டிக் டோக்கில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் Cikgu Chandra, சர்ச்சைக்குரிய சமயச் சொற்பொழிவாளர் Zamri Vinoth இருவருக்கும் எதிராக நாடு முழுவதும் அப்புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

தீய நோக்கத்தோடு தங்களின் சொந்த கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருவதன் மூலம், நாட்டின் அமைதிக்கு அவர்கள் கேடு விளைவித்து வருகின்றனர்.

அவர்களின் அப்பொறுப்பற்றச் செயலால், 3R அம்சங்கள் எனப்படும் இனம்-மதம்-ஆட்சியாளர்கள் தொடர்பில் இளையோர் மத்தியில் தேவையற்ற வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளதாக ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் செயலாளர் அர்வின் கிருஷ்ணன் அறிக்கையொன்றில் கூறினார்.

இந்துக்கள் பற்றியும் அவர்கள் வழிபடும் சிவலிங்கம் குறித்தும் ஆளாளுக்கு வாய்க்கு வந்ததைப் பேசுகின்றனர்; இதனால் டிக் டோக்கில் நாள்தோறும் விவாதம் நடக்கிறது.

அதில் பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் குறிப்பாக இளையோரும் தங்கள் பங்குக்குக் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

இந்த விவாதங்கள் பெரும்பாலும் எல்லை மீறி, ஆபாச வார்த்தைகளின் பரிமாற்றம் வரை சென்று விடுவது, பல்லின மக்கள் வாழும் நாட்டுக்கு அழகல்ல என அர்வின் சுட்டிக் காட்டினார்.

எனவே, இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்ட Cikgu Chandra, Zamri Vinoth இருவருக்கும் எதிராக போலீசும், மலேசிய தொடர்பு-பல்லூடக ஆணையம் MCMC-யும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.இ.கா இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

இதுபோன்ற வீண் சர்ச்சைகள் மீண்டும் நிகழாதிருக்க, இருவரையும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி, தக்க தண்டனை வாங்கிக் கொடுக்குமாறு ம.இ.கா இளைஞர் பிரிவு அதிகாரத் தரப்பைக் கேட்டுக் கொள்வதாக அர்வின் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!