Latestமலேசியா

DLP ஆட்சேபனைகளை களைய, பினாங்கு கல்வித் துறை சந்திப்பு அமர்வுகளை நடத்தும் ; கூறுகிறார் பட்லினா

கோலாலம்பூர், ஜூன் 6 – பினாங்கிலுள்ள, சில பள்ளிகளில், DLP இரட்டை மொழித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள ஆட்சேபனைகளை களைய, மாநில கல்வித் துறை, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் சிறப்பு சந்திப்புகளை நடத்தும்.

DLP திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதிச் செய்யவும், ஏற்கனவே இருக்கும் வழிகாட்டிகளை பின்பற்றி அதன் நோக்கத்தை எட்டவும், பிரச்சனைகளுக்கு தீர்வுக் காணவும் தமதமைச்சு கடப்பாடு கொண்டுள்ளதாக, அமைச்சர் பட்லினா சீடேக் தெரிவித்தார்.

தற்சமயம், கல்வி அமைச்சின் வழிகாட்டிக்கு ஏற்பவே DLP அமல்படுத்தப்படுகிறது.

அதனை செயல்படுத்தும் பள்ளிகள், ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தது, ஒரு வகுப்பிலாவது, கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களை தேசிய மொழியில் அல்லது தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்பது அந்த வழிகாட்டியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை பட்லினா சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, DLP இரு மொழிப் பாடத் திட்டத்தில் அசல் நோக்கம் தக்க வைக்கப்பட வேண்டுமென, பினாங்கிலுள்ள 11 தேசிய மற்றும் சீன இடைநிலைப்பள்ளிகளை சேர்ந்த பள்ளி வாரியங்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும், கல்வி அமைச்சிடம் கோரியுள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அது தொடர்பில் கருத்துரைத்த DAP கட்சியின் தலைவர் லிம் குவான் எங், எந்த ஒரு நிபந்தனையும் இன்றி DLP அமல்படுத்தப்பட வேண்டுமென கூறியிருந்தார்.

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை முழுமையாக ஆங்கிலத்தில் போதிக்கும் கோரிக்கையை மலாய்க்காரர்கள் உட்பட பல பெற்றோர்கள் முன் வைத்திருப்பதையும் குவான் எங் சுட்டிக்காட்டி இருந்தார்.

அதனால், அவ்விவகாரத்தை, மலாய் மொழி போதனையை எதிர்க்கும் செயலாக பார்க்காமல், கல்வி கண்ணோட்டத்தில் பார்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!