
கோலாலம்பூர், ஜூலை.21-மலாக்கா, Durian Tunggal பகுதியில் கடந்தாண்டு நவம்பரில் மூவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்ற தேசிய சட்டத்துறையின் முடிவை அம்மூவரின் குடும்பங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சாடியுள்ளனர். அம்முடிவு முற்றிலும் தேவையற்றது என அவர்கள் விமர்சித்தனர்.
இறப்புக்கான காரணம் குறித்து தீவிரமான சந்தேகம் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லாத சூழலில் மட்டுமே விசாரணை தேவைப்படும். தற்காப்புக்காகவே தாங்கள் செயல்பட்டதாகக் காவல்துறை கூறியதற்கு முரணாக, பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையிலான மிகவும் வலுவான ஒலிப்பதிவு ஆதாரம் இந்த வழக்கில் உள்ளதாக வழக்கறிஞர்கள் ராஜேஷ் நாகராஜனும் Sachpreetraj Singhங்கும் தெரிவித்தனர்.
தோட்டாக்கள் பாய்ந்த விதத்தைப் பார்த்தால் அது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகளுக்கான ஆதாரங்களைக் காட்டுவதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறியதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.
இந்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தேசிய சட்டத்துறைத் தலைவர் தேவையற்ற ஒரு மரண விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் என அவ்விரு வழக்கறிஞர்களும் கூறினர்.
கூட்டரசு அரசியலமைப்பின்படி, வழக்குத் தொடரும் அதிகாரம் தேசிய சட்டத்துறைத் தலைவர் Dusuki Mokhtarருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அப்பொறுப்பை ஒரு மரண விசாரணை அதிகாரிக்கோ அல்லது வேறு யாருக்கோ ஒப்படைக்க முடியாது.
தனக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர Dusuki விரும்பவில்லை என்றால், அவர் பதவி விலக வேண்டும். அவரைப் பதவியிலிருந்து நீக்க அரசாங்கமும் தயங்கக்கூடாது என அவ்வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.
மூவர் உயிரிழந்ததற்கான காரணங்களையும் சூழல்களையும் கண்டறியவும், ஏதேனும் குற்றச் செயல்கள் நிகழ்ந்துள்ளனவா என்பது உள்ளிட்ட அச்சம்பவம் தொடர்பான உண்மைகளை ஆராயவும் விசாரணை நடத்த தேசிய சட்டத்துறை அலுவலகம் நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



