
கோலாலாம்பூர், மே-9-பிரபல தொழிலதிபரும் மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கமான MAICCI-யின் முன்னாள் தலைவருமான தான் ஸ்ரீ Dr கென்னத் ஈஸ்வரன் இன்று, மே 9-ஆம் தேதி காலமானார்.
அவரது மறைவு மலேசிய இந்திய வர்த்தக சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு சிறந்த வர்த்தகரான Dr கென்னத் ஈஸ்வரன், MAICCI மற்றும் இந்திய வணிக மேம்பாட்டுக்காக ஆற்றியப் பணிகள் என்றும் நினைவுகூரப்படும் என, அச்சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
2004 முதல் 2008 பின்னர் 2018 முதல் MAICCI தலைவராக இவர் இருந்துள்ளார்.
அதன் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன், ஒட்டுமொத்த உறுப்பினர்களின் சார்பில் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
அன்னாரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் MAICCI நிர்வாகம் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு, அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், Dr கென்னத் ஈஸ்சரனின் மறைவுக்கு முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தனது ஃபேஸ்புக் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமராக இருந்த காலத்தில் நஜீப்புடன் கென்னத் நெருங்கியத் தொடர்பை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Dr கென்னத் ஈஸ்வரன், 2013 ABN தனியார் தொலைக்காட்சியைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அது பின்னர் செயல்படாமல் போனாலும், செம்பனைத் தோட்டத் தொழில்துறையிலும் மற்ற சில வணிகங்களிலும் இவர் கோலோச்சினார்.
இந்தியத் தொழிலதிபர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்த அவரின் மறைவு, தொழில்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.



