Latestமலேசியா

MV Hondius கப்பலில் ஹந்தாவைரஸ் பரவல்: இரு குழு உறுப்பினர்கள் நெதர்லாந்துக்கு மேற்சிகிச்சைக்காக மாற்றம்

ப்ரையா (Cape Verde), மே 6 – ஹந்தாவைரஸ் பரவல் ஏற்பட்ட MV Hondius கப்பலில் பாதிக்கப்பட்ட இரு குழு உறுப்பினர்கள் அவசர சிகிச்சைக்காக Cape Verde வழியாக நெதர்லாந்துக்கு மாற்றப்பட உள்ளனர்.

உள்ளூர் அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களால் கப்பலுக்கு துறைமுக நுழைவை அனுமதிக்காததால் தற்போது அக்கப்பல் ப்ரையா கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

88 பயணிகள் மற்றும் 59 குழு உறுப்பினர்கள் என மொத்தம் 23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்த இந்த கப்பல், ஏப்ரல் 1ஆம் தேதி அர்ஜென்டினா Ushuaia நகரிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியது.

ஏப்ரல் 26ஆம் தேதி ஒரு நெதர்லாந்து பெண் பயணி உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேலும் ஒரு ஜெர்மன் பயணி மற்றும் மற்றொரு பயணி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஹந்தாவைரஸ் காரணமாக மொத்தம் மூன்று மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

மேலும் ஒரு பிரிட்டிஷ் பயணி ஜொஹன்னஸ்பெர்க் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐந்து பேர் தற்போது சந்தேகத்தின்பேரில் கண்காணிப்பில் உள்ளனர்.

கப்பலில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட இரு குழு உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்றொருவர் Cape Verde வழியாக நெதர்லாந்துக்கு மேற்சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

மருத்துவ நடவடிக்கைகள் முடிந்த பின்னர், கப்பல் ஸ்பெயினின் Canary Islands நோக்கி பயணத்தைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு அனைத்து பயணிகளும் மற்றும் குழு உறுப்பினர்களும் பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் அவரவர் தாய்நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Oceanwide Expeditions நிறுவனம் இந்த மாற்று நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த பரவலை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், மனிதர்-மனிதர் பரவல் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஹந்தாவைரஸ் பொதுவாக எலிகளின் சிறுநீர், மலம் மற்றும் உமிழ்நீர் மூலம் பரவக்கூடிய அரிதான ஆனால் ஆபத்தான வைரஸ் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!