
சிரம்பான், ஜூன்-26 – நெகிரி செம்பிலான், லாபு MVV City மேம்பாட்டுப் பகுதியில் அமையவிருக்கும் லாபு பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடக் கட்டுமானத்திற்காகத் தேவைப்பட்ட 9 மில்லியன் ரிங்கிட் நிதி முழுமையாகத் திரட்டப்பட்டுள்ளது.
சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக்கின் ஆதரவோடு, LPS எனும் பள்ளியின் மேலாளர் வாரியம் ஏற்பாடு செய்திருந்த நிதி திரட்டும் இரவு விருந்து வழி இந்த இலக்கு எட்டப்பட்டது.
Matrix Concepts நிறுவனம் வழங்கிய 6 ஏக்கர் நிலத்தில், 12 வகுப்பறைகள் மற்றும் நவீன வசதிகளுடன் இப்பள்ளி அமையவுள்ளது.
50-க்கு 50 என்ற கூட்டு ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ், கட்டுமானச் செலவில் பாதியை மெட்ரிக்ஸ் நிறுவனம் ஏற்கும் வேளையில், எஞ்சிய நிதிக்கு பள்ளி மேலாளர் வாரியமும் பொறுப்பேற்றுள்ளது.
அதற்கான MoU புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தான நிலையில், 170 மேஜைகளைக் கொண்டு சிரம்பான், Regent Hall மண்டபத்தில் நேற்று இந்த நிதித் திரட்டும் விருந்து நடைபெற்றது.
‘அறிவாலயத்திற்கோர் அடித்தளம்’ என்றக் கருபொருளில் நடைபெற்ற இந்த நிதித் திரட்டல் நிகழ்வு குறித்து கருத்துரைத்தார், இந்த முயற்சியை முன்னெடுத்தவரான, நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜே. அருள் குமார்…
அமைச்சர் அந்தோணி லோக் முயற்சியில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் 20 லட்சம் வெள்ளியோடு, தனியார் நிறுவனங்கள் மற்றும் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அலுவலகம் ஆகியோரும் நிதியுதவி வழங்கியுள்ளதாக, அருள் குமார் சொன்னார்.
இவ்வேளையில், நிதித் திரட்டல் வெற்றிகரமாக முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்த அந்தோணி லோக், உரிய அனுமதி கிடைத்ததும் விரைலேயே கட்டுமானம் தொடங்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
கட்டுமானத்திற்கான நிதியைத் திரட்ட உறுதுணையாக இருந்த அமைச்சர் அந்தோணி கோல், அருள் குமார் மற்றும் அனைத்து கொடைநெஞ்சர்களுக்கும் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் ஆர். நவஜீவன் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
கல்வி அமைச்சின் இறுதி அனுமதி கிடைத்த ஓராண்டுக்குள் இப்பள்ளி கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



