Latestமலேசியா

RCI அறிக்கை: தாபூங் ஹாஜியின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் 

புத்ராஜெயா, ஆகஸ்ட்.21  – தாபூங் ஹாஜி மீதான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) கண்டுபிடிப்புகள் தொடர்பில், அவ்வாரியத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி ஒருவர் ஏழு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC இன்று காலை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன் வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவரை ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை தடுத்து வைக்க அனுமதி வழங்கப்பட்டது.

முன்னதாக காலை 9.38 மணிக்கு அந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் MACC அதிகாரிகளின் பாதுகாப்புடன் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டார். தாபூங் ஹாஜி தொடர்பான RCI அறிக்கை குறித்து MACC-யால் விசாரிக்கப்படுபவர்களில் அவரும் ஒருவர் என நம்பப்படுவதாக நேற்று செய்தி வெளியிட்டப்பட்டிருந்தது. அந்நபர் நாட்டின் பல முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பதவிகளை வகித்த ஒரு முக்கியப் புள்ளி என்றும் கூறப்படுகிறது. எனினும் அத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

RCI அறிக்கை தொடர்பான விசாரணைகளுக்கு உதவ, MACC ஏற்கனவே ஏழு பேரை அழைத்து அவர்களைத் தடுத்தும் வைத்திருந்தது. அவர்களில் கப்பல் நிறுவனம் ஒன்றின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி, கட்டுமான நிறுவனம் ஒன்றின் இயக்குனர், நிறுவனமொன்றின் முன்னாள் இயக்குனர், தாபூங் ஹாஜியின் முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரிகள் நால்வர் ஆகியோரும் அடங்குவர்.

தாபூங் ஹாஜி குறித்த RCIயின் அறிக்கை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. அதில் அவ்வாரியத்தை மேம்படுத்த உதவும் 25 முக்கியப் பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டன. எந்தவொரு விவரத்தையும் விட்டு விடாமல் RCI அறிக்கை தொடர்பான விசாரணையை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என மாமன்னர் Sultan Ibrahim ஆணையிட்டிருந்ததும் குறிப்பிடத்தகக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!