
ஷா ஆலாம், மே-28-SPM தேர்வில் 11A-க்கள் பெற்றுச் சாதனைப் படைத்த சிறந்த மாணவர் ஒருவருக்கு மெட்ரிகுலேஷன் படிப்பில் இடம் மறுக்கப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதான் புகார் எழுப்பியுள்ளார்.
10 A மற்றும் அதற்கு மேல் எடுக்கும் அனைத்து சிறந்த மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்வியில் நேரடியாக இடங்கள் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
ஆனால், 11A-க்கள் எடுத்தும் இந்த மாணவருக்கு இடம் மறுக்கப்பட்டு, பாலிடெக்னிக் கல்லூரியில் இடம் கிடைத்திருப்பதாக, @kanithan74 என்ற டிக் டோக் கணக்கில் அம்மாணவரின் தந்தை வீடியோ பதிவேற்றியுள்ளார்.
இது குறித்து ஏமாற்றம் தெரிவித்த பிரகாஸ், இதுபோன்ற சம்பவங்கள், தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக் கொள்கைக் மீதான வெளிப்படைத் தன்மையை கேள்விக் குறியாக்கி விடுமென்றார்.
எனவே, உயர் கல்வி அமைச்சும் சம்பந்தப்பட்ட இன்னபிற அரசு நிறுவனங்களும் இதற்கான தெளிவான – விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
சிறந்த மதிப்பெண்கள் பெற்ற திறமைமிக்க மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படக் கூடாது என, அறிக்கை வாயிலாக பிரகாஸ் வலியுறுத்தினார்.



