
கோலாலம்பூர், ஆகஸ்ட்.13- 2026/2027 கல்வியாண்டில் பொதுப் பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கான விண்ணப்ப முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. STPM முடித்த மாணவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியுடைய மாணவர்கள் அம்முடிவுகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை மதியம் 12 மணி தொடங்கி ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை https://upu.mohe.gov.my, https://upu2.mohe.gov.my, UPUPocket மொபைல் செயலி, MyGov மொபைல் செயலி ஆகியவற்றின் மூலம் முடிவுகளைப் பார்க்கலாம்.
பொதுப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்தவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாய்ப்பை ஏற்றுக் கொள்வதை உறுதிப்படுத்திய பிறகு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் பொதுப் பல்கலைக்கழகங்கள் தகுதி பெற்றவர்களுக்கு சேர்க்கைக்கான வாய்ப்புக் கடிதங்களை வழங்கும் என அமைச்சு அறிக்கையொன்றின் வழி கூறியது.
வழங்கப்பட்ட வாய்ப்பை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது மீதான உறுதிப்படுத்தலை மாணவர்கள் ஆகஸ்ட் 15 முதல் 23 வரை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் இணையதளத்தில் செய்யலாம். வாய்ப்பு கிடைக்காதவர்கள் மட்டுமே, ஆகஸ்ட் 14 மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 23 மாலை 5 மணி வரை 10 நாட்களுக்குள், upu.mohe.gov.my வழியாக UPUOnline-இல் தங்கள் மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம்.
2026/2027 கல்வியாண்டிற்கான சேர்க்கை வாய்ப்புகள் இறுதியானவை. பாடப்பிரிவு அல்லது பல்கலைக்கழகத்தை மாற்றுவதற்கான எந்தவொரு விண்ணப்பமும் அனுமதிக்கப்படாது. புதிய மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு, பாடப்பிரிவுகளின் அடிப்படையில் இருக்கும் காலி இடங்களைப் பொறுத்தே மேல்முறையீடுகள் பரிசீலிக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.



