
கோலாலம்பூர், ஜூலை.30- மலாக்காவில் உள்ள Sungai Udang சிறையிலிருந்து கைதி ஒருவர் தப்பி விட்டதாகக் கூறப்படுவதை சிறைச்சாலைத் துறை மறுத்திருக்கிறது. அச்சிறையில் இருந்து கைதி தப்பிய சம்பவம் ஏதும் நிகழவில்லை என அது உறுதிப்படுத்தியது.
கைதி தப்பி விட்டதாகப் பரவியுள்ள தகவல் உண்மையில்லை. அவ்வாறான செய்தி பொதுமக்களிடையே பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும். எனவே சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பவோ பரப்பவோ வேண்டாம் என அறிக்கையொன்றின் வழி அது பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியது.
சிறைச்சாலைத் துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கக்கூடிய அல்லது பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய போலித் தகவல்கள் பரப்பப்படுவதை மலேசியச் சிறைச்சாலைத் துறை மிகவும் கடுமையான ஒன்றாகக் கருதுகிறது.
போலியான அல்லது சரிபார்க்கப்படாத செய்திகளைப் பரப்பும் தரப்பினர் மீது சட்ட விதிகளின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அது எச்சரித்தது.



