Latestஅமெரிக்காஉலகம்

அதிரடி திருப்பம்: செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் சம்மதம்; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன், ஏப்ரல்-17-​ஈரான் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் (Enriched Uranium) முழுவதையும் ஒப்படைக்க அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறி, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதோடு, அமெரிக்காவும் ஈரானும் வெற்றிகரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒப்பந்தம் நிறைவேறினால் தடையில்லா எண்ணெய் விநியோகம், Hormuz நீரிணைத் திறப்பு எல்லாம் சாத்தியமாகும் என்றும் அவர் சொன்னார்.

“அணு தூசியை எங்களிடமே தந்துவிட அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்” என வாஷிங்டனில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஈரான், அணு ஆயுதங்களைத் தயாரிக்கவே செறிவூட்டப்பட்ட அந்த யுரேனியக் கையிருப்பை வைத்திருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.

அவ்வகையில், யுரேனியம் தொடர்பாக கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 21 மணி நேர அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இவ்வறிவிப்பு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை 20 ஆண்டுகளுக்கு முடக்க அமெரிக்கா ‘கட்டளையிட்டதாகவும்’, ஆனால் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே அவ்வாறு செய்ய முடியுமென தெஹ்ரான் திட்டவட்டமாகத் தெரிவித்ததாகவும் அப்போது கூறப்பட்டது.

​இன்று ட்ரம்ப் இந்த தகவலை மிகுந்த நம்பிக்கையுடன் வெளியிட்டிருந்தாலும், ஈரான் தரப்பிலிருந்து இதுவரை அது உறுதிப்படுத்தப்படவில்லை.

ஈரான் தனது அணுசக்தி கொள்கையை இவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்குமா என்ற கேள்வி எழுந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ட்ரம்ப் சொல்வது உண்மையென்றால், அமெரிக்காவின் ‘அதிகபட்ச அழுத்தம்’ கொடுக்கும் கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

என்றாலும், இந்த யுரேனியம் பரிமாற்றம் எப்படி நடைபெறும், இதற்குப் பதிலாக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளில் அமெரிக்கா ஏதேனும் சலுகைகளை வழங்கியதா போன்ற விவரங்களுக்காக அனைத்துலக அணுசக்தி பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!