
பேராக் பண்டார் பாருவில் கோழியை விழுங்கிய 70 கிலோ மலைப்பாம்பு
பண்டார் பாரு, பிப்ரவரி 10-
பண்டார் பாரு , ஜாலான் செலாமா கம்போங் பத்து 22 இல் உள்ள ஒரு குடியிருப்பாளரின் வீட்டிற்கு அருகில் நேற்று ஒரு மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது. கோழிக்கூண்டில் இருந்த அந்த மலைப் பாம்பு அங்கிருந்த கோழியை விழுக்கிக் கொண்டிருந்தபோது அவ்வீட்டிலுள்ள 56 வயது மாது ஒருவர் இச்சம்பவம் குறித்து மலேசிய சிவில் பாதுகாப்பு படையான APM மிற்கு தகவல் தெரிவித்தார்.
நள்ளிரவு 12.54 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பாக தனது தரப்பினருக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து அந்த மலைப்பாம்பை பிடிப்பதற்கு APM குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டதாக Bandar Baharu மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி, லெப்டினன்ட் அப்துல் ரஹிம் கைருடின் ( Abdul Rahim Khairuddin )தெரிவித்தார்.
மூன்று மீட்டருக்கும் அதிகமான நீளமும் 70 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பு, வலையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது. தற்காலிக பாதுகாப்பிற்காக APM அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் பாதுகாப்புத் துறையிடம் அந்த பாம்பு ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே தற்போதைய வெப்பமான வானிலை காரணமாக பாம்புகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி, குறிப்பாக குடியிருப்பாளர்களின் வீடுகளில் தங்குமிடம் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி அப்துல் ரஹிம் வலியுறுத்தினார்.



