
கிள்ளான், நவ17-கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை 77 வயதில் நிரூபித்துள்ளார் கிள்ளானைச் சேர்ந்த மூத்த அரசியல் ஆய்வாளர் டத்தோ பெரியசாமி முத்தன். தளராத மன உறுதியுடன் நாட்டின் முதன்மை பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் (UM) ஐந்து செமஸ்டர்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சவால்களை முறியடித்து, குறித்த காலத்திற்குள் (Graduate on Time – GOT) முனைவர் பட்டம் பெற்று இவர் சாதனை படைத்துள்ளார்.
கிள்ளான் சுங்கை ராசா தோட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர், ஆரம்பக் கல்வியைத் தமிழ்ப்பள்ளியிலும், இடைநிலைக் கல்வியை கிள்ளான் உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றார். பின்னர் மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் (UKM) இளங்கலைப் பட்டமும், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (USM) முதுகலைப் பட்டமும் பெற்றார்.
நீண்டகாலமாகவே அரசியல் ஆய்வாளராக இருந்து வரும் இவர், ‘உத்துசான் மலேசியா’, ‘பெரித்தா ஹரியான்’, ‘அவானி’ உள்ளிட்ட மலாய் ஊடகங்களில் அரசியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். மலேசிய இந்தியர்களின் அரசியல் வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் 374 பக்கங்களைக் கொண்ட ‘பெர்ஜுவாங்கன் பொலித்திக் கொம்யூனிட்டி இந்தியா” (Perjuangan Politik Komuniti India) என்ற நூலையும் அண்மையில் வெளியிட்டுள்ளார்.
தனது எழுத்துகளும் ஆய்வுகளும் அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணமே முனைவர் பட்டம் பெறத் தூண்டியதாக பெரியசாமி தெரிவித்தார்.
ஆய்வுப் பணிகளில் சிரமம் இல்லாவிட்டாலும், கணினி மற்றும் இணையத் தேடல் போன்ற தகவல் தொழில்நுட்ப அம்சங்கள் தொடக்கத்தில் பெரும் சவாலாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், பேரப்பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் உதவியுடன் அவற்றைக் கற்றுக் கொண்டதாகக் கூறினார். ஆய்வு வழிகாட்டி டாக்டர் தௌபீக் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும் வெற்றிக்கு உதவியதாகக் இவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இளைய தலைமுறையினர், குறிப்பாக இந்திய இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறுவதுடன் உயர்கல்வியிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று இவர் வலியுறுத்தினார்.
வயதைக் காரணம் காட்டாமல் தமது இலக்கில் கவனம் செலுத்தி சாதித்திருக்கும் இவரது விடாமுயற்சியும் ஊக்கமும் இன்றைய தலைமுறையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் மிகப் பெரிய பாடமாகவும் அமைந்திருக்கிறது என தாராளமாகக் கூறலாம். இவரது சாதனையைப் பாராட்டுவதுடன், மேலும் பல வெற்றிகளைப் பெற வணக்கம் மலேசியா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது!



