
சுபாங் ஜெயா, ஆகஸ்ட்.05- சிலாங்கூர்,சுபாங் ஜெயாவின் USJ 1 பகுதியில் தொழிற்சாலையொன்றின் அருகே உள்ள கிள்ளான் ஆற்றில், வெளிநாட்டவர் என்று நம்பப்படும் பெண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. நேற்று மதியம் 12.58 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக சுபாங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.
அப்பெண்ணின் முகம் கடுமையாகச் சிதைந்திருந்தது. கைகள் மற்றும் கால்களில் தோல் உரிந்திருந்தது சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அப்பெண் மஞ்சள் நிற ஜாக்கெட் மற்றும் வெளிர் நிற ஜீன்ஸ் அணிந்திருந்ததாக Wan Azlan விளக்கினார்.
அதோடு அப்பெண்ணின் மின்னணு அடையாள அட்டையும் புகைப்படமும் இருந்த தோளில் மாட்டும் பையும் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய, அப்பெண்ணின் சடலம் செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் காணாமல் போயிருந்தால், விசாரணைக்கு உதவ முன் வருமாறு Wan Azlan கேட்டுக் கொண்டார்.



