
கோலாலாம்பூர், பிப்ரவரி-5-‘சட்டவிரோதமாகக்’ கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக வரும் சனிக்கிழமை கோலாலாம்பூர் SOGO பேராங்காடி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு போலீஸார் பெர்மிட் வழங்கக் கூடாது.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், தேசியப் போலீஸ் படைத் தலைவரிடம் அக்கோரிக்கையை வலியுறுத்ததியுள்ளார்.
இன்று மக்களவையில் நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், கிள்ளான் எம்.பி வீ. கணபதிராவ், சுங்கை சிப்புட் எம்.பி கேசவன் சுப்ரமணியம், பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி தினகரன் ஆகியோர் உடனிருக்க, ராயர் அவ்வாறு வலியுறுத்தினார்.
பேச்சுரிமைக்கும், அமைதிப் பேரணி நடத்தும் உரிமைக்கும் தாங்கள் எதிரானவர்கள் அல்ல; ஆனால் அதுவே மக்களின் ஒற்றுமையையும் தேசிய நல்லிணக்கத்தையும் பாதிக்கும் என்றால், அதை அப்படியே விட்டு விட முடியாது என்றார் அவர்.
பேரணிக்குத் தலைமையேற்பதும் நமக்கு புதியவர் அல்ல; ஏற்கனவே இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வந்த, வரும் சமய போதகர் சாம்ரி வினோத் தான்.
அவர் மீது ஏற்கனவே ஆயிரக்கணக்கில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டும், இதுவரை உருப்படியான நடவடிக்கை இல்லை என்பதையும் ராயர் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில், சாம்ரியையும் அவன் பின்னால் SOGO-வில் திரளப் போவதாக கூறப்படும் நூற்றுக் கணக்கான அரசு சார்பற்ற அமைப்புகளையும் , பேரணியில் பங்கேற்க விட்டால் என்னவாகும் என்பதை போலீஸ் புரிந்துகொள்ள வேண்டும்.
கண்டிப்பாக பேரணியில் குறிப்பிட்ட மதத்தையோ அல்லது வழிபாட்டுத் தலங்கள் பற்றியோ அவர்கள் தாக்கிப் பேசுவர்; அந்த வீடியோக்கள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடுமென ராயர் அச்சம் தெரிவித்தார்.
இது குறித்து தாம் உட்பட ஏராளமானோர் போலீஸில் புகார் செய்துள்ளதைக் குறிப்பிட்ட ராயர், அவற்றை கிடப்பில் போடாமல் இப்பேரணியை தடுத்து நிறுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.
தேசிய நல்லிணக்கம், இதுபோன்ற புல்லுருவிகளால் கெடக் கூடாது; மக்கள் சுபிட்சத்துடன் வாழ்வதை உறுதிச் செய்யும் பொறுப்பு அனைவருக்குமானது என்றார் அவர்.



