
கோலாலம்பூர், நவ 6 – மலேசிய சுகாதார அமைச்சின் (KKM) அனுமதி இல்லாமல், கடந்த ஏழு ஆண்டுகளாக சட்டவிரோதமாக பல் மருத்துவ மையத்தை நடத்தி வந்த ‘Yaman’ நாட்டு நபரின் நடவடிக்கை சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சுமார் 40 வயதான அந்நபர், பல் மருத்துவராக பதிவு செய்யப்படாமலேயே, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக தலைநகரில் தனியார் பல் மருத்துவ மையம் ஒன்றை இயக்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பல் மருத்துவ மையம் முழுமையான நவீன உபகரணங்களுடன் இயங்கி வருவதுடன், பல் பதிப்பு, பல் எடுப்பு, பல் அடிப்படை சிகிச்சை, பல் சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் வழங்கி வந்துள்ளது.
சுகாதார அமைச்சின் பல் மருத்துவ பிரிவு (Program Kesihatan Pergigian, KKM) மேற்கொண்ட திடீர் சோதனையில், அந்நபர் மலேசிய பல் மருத்துவக் கவுன்சிலில் (MDC) பதிவு செய்யப்படாதவர் என்றும், நாட்டின் சட்டப்படி சுகாதார துறையில் பணியாற்றும் அனுமதியில்லாதவர் என்றும் உறுதி செய்யப்பட்டது.
அந்த ஆடவர் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமாக இம்மையத்தை நடத்தி வருவதுடன்,
அந்த நபர் மாதத்திற்கு பல லட்சம் ரிங்கிட் வருமானத்தை ஈட்டி வந்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டது.



