
கோலாலம்பூர், நவ.25-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கை உட்படுத்திய கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் குறிப்புகள் கசிந்ததாகக் கூறப்படுவது தொடர்பில், DAP கட்சியின் டோனி புவாவிடம் விசாரணை நடத்தப்படலாம். தேசிய காவல்படைத் தலைவர் Tan Sri Mohd Khalid Ismail அதனைக் கோடி காட்டியுள்ளார்.
அவ்விவகாரம் குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, விசாரணை அதிகாரியிடம் அது ஒப்படைக்கப்படும். எனினும், இதுவரை காவல்துறைக்கு எந்தவோர் அதிகாரப்பூர்வ புகாரும் கிடைக்கவில்லை என அவர் கூறினார். சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் மட்டுமே அவ்விவகாரம் பரப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புகார் கிடைக்காவிட்டாலும் விசாரணை நடத்த காவல்துறை தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
கூட்டக் குறிப்புகள் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்துவதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் பயன்படுத்துமாறு உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail முன்னதாக காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அவ்விவகாரத்தை விசாரிக்குமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இவ்வேளையில், இன்று மக்களவையில் பேசிய அன்வார், ரகசியக் கூட்டத்தின் குறிப்புகளை அரசாங்கம் பொதுவெளியில் வெளியிட்டதாகக் கூறப்படுவதை மறுத்தார். நஜிப்பின் நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு தொடர்பான ஆவணத்தைப் பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு அல்லது தேசிய சட்டத்துறை அலுவலகம் கசியவிட்டதாகக் கூறப்படுவதையும் அவர் நிராகரித்தார்.
மாறாக, நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்கு ஏதுவாக, அந்த ஆவணத்தின் சில பகுதிகளைத் தேசிய சட்டத்துறை அலுவலகம் ரகசிய நீக்கம் செய்ததாக அன்வார் தெளிவுபடுத்தினார்.



