
ஷா ஆலாம், நவம்பர்-26,திருடப்பட்ட காரைத் தெரியாமல் வாங்கிய பெண் ஒருவருக்கு 208,000 ரிங்கிட்டைத் திருப்பிச் செலுத்துமாறு பழைய கார் விற்பனை நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட உத்தரவை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் நேற்று உறுதிச் செய்தது.
Rosyati Mohamed என்ற அப்பெண், 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் FC Car Trade நிறுவனத்திடமிருந்து Toyota Vellfire காரை வாங்கியிருந்தார்.
எனினும், 2022-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து இலாகாவான JPJ மேற்கொண்ட விசாரணையில், அது திருடப்பட்டு, அடையாள எண் மாற்றப்பட்ட வாகனம் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், வாகனத்தை விற்பனை செய்பவர், அதன் சட்டப்பூர்வ உரிமையை வாங்குபவருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டியது அவசியம் என நீதிபதி Noor Hayati Md தெரிவித்தார்.
விற்பனை நிறுவனம் நல்லெண்ணத்துடன் செயல்பட்டிருந்தாலும், அதன் சட்டப்பூர்வப் பொறுப்பிலிருந்து விடுபட முடியாது என அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், வாகனப் பரிசோதனையிலும் உரிமை மாற்றத்திலும் PUSPAKOM மற்றும் JPJ அலட்சியமாகச் செயல்பட்டதாக முன்னதாக செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, போதிய ஆதாரங்கள் இல்லாததால் உயர் நீதிமன்றம் இரத்துச் செய்தது.
அப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட கூடுதல் 50,000 ரிங்கிட் இழப்பீடும் இரத்துச் செய்யப்பட்டது.
எனினும், வாகனத்திற்கான கடன் வட்டி மற்றும் 10,000 ரிங்கிட் வழக்குச் செலவை விற்பனை நிறுவனம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு நிலைநிறுத்தப்பட்டது.



