
தைப்பிங், நவம்பர்-26,பிறந்த பெண் குழந்தையைக் கத்தியால் குத்திக் கொன்றதாக 19 வயது இளம் பெண் மீது தைப்பிங் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, Nurul Iman Najiha Abdullah அதைப் புரிந்துகொண்டதாகத் தலையசைத்தார்.
எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால், அவரது வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
நவம்பர் 14 முதல் 16-ஆம் தேதிக்குள், பேராக், பந்தாய் ரெமிஸ், கம்போங் பாஞ்சோரிலுள்ள செம்பனைத் தோட்டத்தில் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, குழந்தையின் உடலைப் புதைத்து, அதன் பிறப்பை மறைத்ததாக Nurul Iman மீதும் அவரது 19 வயது காதலர் Aidil Eikmal
மீதும் கூட்டாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அக்குற்றத்தை Aidil ஒப்புக்கொண்ட நிலையில், Iman மறுத்தார்.
இமான் மனநலப் பிரச்னைகளை எதிர்நோக்கியிருப்பதாகவும், இதுவரை அதற்கான சிகிச்சையைப் பெறவில்லை என்றும் அவர்களது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குழந்தையின் பிறப்பை மறைத்த குற்றச்சாட்டில் இருவருக்கும் தலா 5,000 ரிங்கிட் ஜாமீன் நிர்ணயிக்கப்பட்டது.
எனினும், கொலைக் குற்றச்சாட்டில் Iman-னுக்குப் பிணை வழங்கப்படவில்லை.
வழக்கு ஜனவரி 4-ஆம் தேதி மீண்டும் செவிமெடுக்கப்படும்.



