
அனுமதியில்லாமல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்: உணர்ச்சிவசப்படாமல் நிதானம் காக்க மக்களுக்குக் கோரிக்கை
கோலாலாம்பூர், பிப்ரவரி-12,
அனுமதியில்லாமல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரம் அண்மைய காலமாக சர்ச்சையாகியுள்ள நிலையில், நாட்டு மக்கள் அமைதிக் காக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் தலைமையில் இன்று மக்களவையில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் அக்கருத்து வலியுறுத்தப்பட்டது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த மேலுமிரு எம்.பிக்களான பாங்கி உறுப்பினர் Syahredzan Johan, உலு லங்காட் உறுப்பினர் Mohd Sany bin Hamzan ஆகியோரும் உடனிருந்தனர்.
அனுமதியில்லாமல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்தில் சட்டத்திற்குபட்டு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
எனவே, மக்கள் உணர்ச்சிவயப்படக் கூடாது என ராயர் கேட்டுக் கொண்டார்.
அதே சமயம் , பிரச்னையை எதிர்நோக்கியுள்ள ஆலயங்களின் நிர்வாகங்கள், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை உடனடியாகச் சந்தித்து முறையிடுமாறும் அவர் ஆலோசனைக் கூறினார்.
இவ்வேளையில் பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் முக்கியம் என வலியுறுத்திய Syahredzan, இவ்விவகாரத்தை சட்டப்படி அரசாங்கம் தீர்வு காண வாய்ப்பு வழங்க வேண்டுமென்றார்.
சமூக ஊடகங்களில் இன பதற்றத்தை உருவாக்கக் கூடிய வகையில் பதிவிட்டு நிலைமையை மோசமாக்கக் கூடாது எனவும் அனைத்து மலேசியர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி குளிர் காய நினைக்கும் தரப்பினருக்கு இடம் கொடுத்து, நமது ஒற்றுமையை நாமே கெடுத்துக் கொள்ளக் கூடாது என Mohd Sany bin Hamzan வலியுறுத்தினார்.
எந்தவொரு வழிபாட்டுத் தலம் மீது அதிருப்தி இருந்தாலும், அதை முறைப்படி தெரிவிக்க வேண்டும்; நடவடிக்கை எடுக்க அதிகாரத் தரப்பு உள்ளது.
யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதற்கு நியாயம் கற்பிக்கக் கூடாது என்றும் Sany நினைவுறுத்தினார்.
அனுமதியில்லாமல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக சிலர் கடந்த வாரம் பேரணி ஏற்பாடு செய்து கடைசியில் அது பிசுபிசுத்து போன நிலையில், ரவாங்கில் ஓர் இந்துக் கோவில் தனிநபர்களால் மணிவாரி இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



