
கோலாலம்புர், ஆகஸ்ட் 5 – மலேசியாவின் வடக்கு எல்லை வழியாக, குறிப்பாக வியட்நாமைச் சேர்ந்த சட்டவிரோத வேட்டையாடும் கும்பல்கள் நாட்டுக்குள் நுழைந்து, மலாயா புலி உள்ளிட்ட அரிய வனவிலங்குகளை வேட்டையாடுவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
காட்டுப் பாதைகள் வழியாக நுழையும் இக்கும்பல்கள் நீண்ட காலம் காட்டிலேயே தங்கி, மலாயா புலி, யானை, எறும்புத்தின்னி, மான் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடுகின்றன.
தற்போது காடுகளில் சுமார் 200 மலாயா புலிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஒரு புலி கருப்புச் சந்தையில் 500,000 ரிங்கிட் வரை விற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
2019 முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 2,851 கண்ணிகள் அகற்றப்பட்டு, 1,230 பேர் கைது செய்யப்பட்டதுடன், 416.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வனவிலங்குகளை பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு (AI), கேமரா கண்ணிகள், செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் ட்ரோன்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களையும் PERHILITAN பயன்படுத்தி வருகிறது.



