Latestமலேசியா

அது பழைய வீடியோ…” பணிப்பெண் தாக்கப்படும் வைரல் வீடியோ குறித்து கணவர் விளக்கம்

ஜோகூர் பாரு, ஜூன்-14 – ​சமூக வலைத்தளங்களில் வெளிநாட்டுப் பணிப்பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அது கடந்தாண்டு நடந்த பழைய சம்பவம் என, அந்த வீடியோவில் காணப்படும் நபர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

​இந்தோனேசியப் பணிப்பெண் ஒருவர், குடும்ப உறுப்பினர்கள் சிலரால் தலைமுடிக் கற்றையைப் பிடித்து இழுத்து, தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட அந்தப் பணிப்பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

​இந்நிலையில், அந்த வீடியோவில் இருக்கும் ஓர் ஆடவர் தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

“இந்த வீடியோவை என் மைத்துனர் தான் பதிவேற்றியுள்ளார். தற்போதுள்ள பணிப்பெண் வீட்டில் திருடியதாகக் கூறப்படுவதால், அவருக்கு பயம் காட்டுவதற்காகக் கூட பழையை வீடியோவை மீண்டும் பதிவேற்றியிருக்கலாம்” என்றார் அவர்.

பராமரிப்பில் இருந்த குழந்தையை உடல் ரீதியாக அடித்து துன்புறுத்தியதன் பேரில் சம்பந்தப்பட்ட பணிப்பெண் தாக்கப்பட்டதாக நம்பப்படும் நிலையில், இது குறித்து கடந்தாண்டே போலீஸில் புகார் செய்யப்பட்டு விட்டது.

போலீஸும் அனைவரையும் அழைத்து விசாரித்து விட்டது.

ஆனால், பாதிக்கப்பட்ட அந்தப் பணிப்பெண் ஏற்கனவே இந்தோனேசியாவுக்குப் பாதுகாப்பாகத் திரும்பி விட்டதாகவும், முன்னாள் முதலாளி குடும்பத்துக்கு எதிராக வழக்கைத் தொடர அவருக்கு விருப்பம் இல்லாததாலும், யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை என தெரியவருகிறது.

இவ்வேளையில், இந்த வைரலான வீடியோ குறித்து இந்தோனேசிய தூதரகம் போலீஸில் புகார் செய்துள்ளது.

இதையடுத்து போலீஸ் தரப்பிலிருந்து விரைவில் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!