
கோலாலம்பூர், ஜூலை-4-உணவக ஊழியர் ஒருவர் அப்பளம் கட்டுவதற்கு முன் ஒரு பிளாஸ்டிக் பையில் காற்று ஊதும் காணொளி சுகாதாரம் குறித்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
X தளத்தில் பரவலாகப் பகிரப்பட்ட அக்காணொளியில், அந்த ஊழியர் அப்பளம் கட்ட ஒரு மெல்லிய பிளாஸ்டிக் பையைத் தன் வாயருகே வைத்திருப்பது தெரிகிறது.
அவர் விசிறியைப் பயன்படுத்துவதற்குப் பதில் உணவுப் பொட்டலத்திற்குள் ஊதியது குறித்து காணொளியைப் பதிவு செய்த நபர் அதிருப்தி அடைந்து பேசுவதும் அக்காணொளியில் கேட்கிறது.
இந்நிலையில், அக்காணொளி பல விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. இணையவாசிகள் பலர் சுகாதார நடைமுறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ஏன் இத்தகையதொரு நடைமுறை இருக்கிறது, இக்காலத்தில் இப்படியும் நிகழ்கிறதா என அவர்கள் குறைபட்டுக் கொண்டுள்ளனர்.
இவ்வேளையில், சம்பந்தப்பட்ட உணவகத்தின் சரியான இடம், காணொளி பதிவு செய்யப்பட்ட தேதி உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி தெளிவான விவரங்கள் இல்லை. வைரலான அக்காணொளி தொடர்பில் அந்த உணவகமும் இன்னும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.



