
கோலாலம்பூர், ஜூன் 26 – நாடு முழுவதுமுள்ள பெட்ரோனாஸ் எரிபொருள் நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் வரை எரிபொருள் விநியோகம் சீராகவும் போதுமான அளவிலும் இருக்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலினா ஒத்மான் சாயிட் (Datuk Seri Azalina Othman Said) உறுதியளித்தார்.
தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றத்தின் (NEAC) வாராந்திர கூட்டத்தில் பெட்ரோனாஸ் வழங்கிய அதிகாரப்பூர்வ அறிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் ஏற்படக்கூடிய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க, நாட்டின் எரிபொருள் மற்றும் எரிசக்தி விநியோக நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்கும் சிறப்பு நெருக்கடி மேலாண்மை பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஏற்படாத வகையில், மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கப் பகுதிகள் உள்ளிட்ட மத்திய கிழக்கிற்கு வெளியேயுள்ள நாடுகளிலிருந்தும் கச்சா எண்ணெய் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அசாலினா கூறினார்.



