
கோலாலாம்பூர், மே-18-நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில், கட்டாய ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு காரணமாக ஆண்டுதோறும் சராசரியாக 12,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை இழந்து வருவதாக கல்வி அமைச்சு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற்ற ஆசிரியர்களில் 61 விழுக்காட்டினர் தங்களின் பணி மீதான ஆர்வம் குறைந்ததையே முதன்மைக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
16.3 விழுக்காட்டினர் குடும்பக் காரணங்களுக்காகவும், 11.2 விழுக்காட்டினர் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் மன அழுத்தச் சவால்களினாலும், 6.7 விழுக்காட்டினர் தனியார் துறைகளுக்கு மாறியதாலும் தங்களின் பணியை விட்டு விலகியுள்ளனர்.
இந்தத் தரவுகள் அனைத்தும் நாட்டின் கல்வித் துறையில் நிலவி வரும் கொள்கை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு நெருக்கடியை மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இவ்விவகாரம் குறித்துக் கருத்துரைத்துள்ள மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் கல்வி மேம்பாடு மற்றும் நலனபிவிருத்திச் சங்கத் தலைவர் வெற்றிவேலன் மகாலிங்கம், இந்த புள்ளிவிவரங்கள் கல்வித் துறையில் உடனடி மற்றும் முழுமையான சீர்திருத்தங்கள் தேவை என்பதை உணர்த்துவதாகக் கூறினார்.
அடிக்கடி மாற்றப்படும் கல்விக் கொள்கைகள், அதிகரித்து வரும் அரசியல் தலையீடுகள், அதிகப்படியான நிர்வாகச் சுமை மற்றும் செயல்திறன் எதிர்பார்ப்புகள் காரணமாக ஆசிரியர்கள் கடுமையான மனநல சவால்களையும், வேலை திருப்தியின்மையையும் எதிர்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, ஆசிரியர்களின் தேவையற்ற நிர்வாகச் சுமைகளைக் குறைப்பது, அவர்களின் மனநலனுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு முறையை வலுப்படுத்துவதன் மூலமே கல்வித் தரத்தையும் எதிர்காலத் தலைமுறையினரையும் பாதுகாக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.



