
கோத்தா பாரு, செப்டம்பர்-6,நில அனுமதி அல்லது சட்டப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் இந்து ஆலயங்களை ‘சட்டவிரோதக் கோயில்கள்’ அல்லது பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘Kuil Haram’ என்ற சொல்லால் முத்திரைக் குத்துவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என, பாஸ் கட்சியின் ஆதரவாளர் மன்றமான DHPP வலியுறுத்தியுள்ளது.
கிளந்தான், கோத்தா பாருவில் நடைபெற்ற 72-ஆவது பாஸ் பொதுப் பேரவையில் உரையாற்றிய DHPP தேசியத் தலைவர் பி. குமரேசன், இதுபோன்ற சொற்கள் இந்தியச் சமூகத்தினரின் மனதைப் புண்படுத்துவதாகத் தெரிவித்தார்.
ஆலயங்களுக்கு நிலப் பட்டா, அனுமதிகள் அல்லது சட்டரீதியான சிக்கல்கள் இருந்தால், அதைத் தேவையின்றி முத்திரையிடாமல், நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் சட்டரீதியாகச் தீர்க்க வேண்டும் என அவர் கூறினார்.
தவிர, நிலப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் வழிபாட்டுத் தலங்களுக்குக் கெடா மாநில அரசு மேற்கொண்ட நடைமுறையைப் பின்பற்றி, மத்திய அரசும் ஒரு முறையான தீர்வைக் காண வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, நாட்டில் அதிகரித்து வரும் சூதாட்டப் பழக்கம் குறித்தும் தமதுரையில் குமரேசன் கவலைத் தெரிவித்தார்.
சூதாட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உரிமை அல்ல, அது ஒட்டுமொத்த சமுதாயத்தையுமே சீரழிக்கும் ஒரு நச்சு எனக் குறிப்பிட்டதோடு, இணையச் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



