
செப்பாங், ஏப் 17 – ஆஸ்திரேலியாவிற்கு எண்ணெய் விற்பதற்கு மலேசியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
ஆஸ்திரேலியப் பிரதமருடனான பேச்சுக்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத் தேவைகளில் அதிக கவனம் செலுத்தியதாக அவர் கூறினார்.
நேற்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸுடனான ( Anthony Albanese ) தனது சந்திப்பில், ஆஸ்திரேலியாவிடமிருந்து Phosphate தேவையென மலேசியா வலியுறுத்தியது.
அதே நேரத்தில் மலேசியாவிடமிருந்து உரம் போன்ற சில மூலப்பொருட்களைப் பெறுவது உள்ளிட்ட பரஸ்பர தேவைகள் குறித்தும் ஆஸ்திரேலிய பிரதமர் விவாதித்தார் என அன்வார் கூறினார்.
ஆஸ்திரேலியாவும் டீசல் கோரியதாகவும் , ஆனால் உள்நாட்டுத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியிருப்பதால், தற்போதைக்கு மலேசியாவால் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என்றும் அன்வர் சுட்டிக்காட்டினார்.
சைபர்ஜயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் அன்வார் செய்தியாளர்களிடம் இந்த விளக்கத்தை தெரிவித்தார்.



