
சிரம்பான், ஜூலை-29-இந்தியச் சமுதாயத்தின் விவகாரங்கள் மற்றும் பிரச்னைகளை இனி தாமே நேரடியாகக் கண்காணிக்கப் போவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
சிரம்பானில் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர், சமுதாய மக்களிடமிருந்து பெறப்பட்ட எண்ணற்ற கோரிக்கைகள் மற்றும் புகார்களின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மித்ரா (MITRA), சாரா (SARA), தெக்குன் (TEKUN) மற்றும் ‘அமானா இக்தியார்ர மலேசியா’ போன்ற அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து நிர்வகிப்பார் என்றும், அதேவேளையில் ஒட்டுமொத்த மேற்பார்வையைத் தாம் நேரடியாக மேற்கொள்ளவிருப்பதாகவும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
இவ்வேளையில், மடானி அரசாங்கத்தின் கீழ் மித்ரா நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது, SPM தேர்வில் 10A பெற்ற மாணவர்களுக்கு அசாஸி மற்றும் மெட்ரிகுலேஷன் உயர்கல்வி வாய்ப்பு, மற்றும் நீண்டகாலமாகக் கிடப்பில் இருந்த குடியுரிமைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டது ஆகியவற்றைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, ஆலய விவகாரங்கள் குறித்த தமது முந்தைய கருத்துகளுக்காக பிரதமர் வருத்தம் தெரிவித்தார்.
_”கோயிலை ‘kuil haram’ என நான் சொல்லியிருந்தால், அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அது ஒரு தொழில்நுட்பக் குறைபாடுதான். அந்தத் தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன்”_ என்றார் அவர்.
ஆனால், தமது அரசாங்கம் பழையக் கோயில்களை இடித்ததில்லை என்றும் நீதியுடன் ஆட்சி நடத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் அன்வார் கூறினார்.
இறுதியாக, இனவாத அரசியல் பேச்சுகளையும் பிளவுப்படுத்தும் கருத்துகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பிரதமர், அரசாங்கத்தைச் செயல்களின் மூலமே மதிப்பிட வேண்டும் என வலியுறுத்தினார்.
டத்தோ ஸ்ரீ ரமணன் உள்ளிட்ட இந்தியச் சமூக பிரதிநிதிகளும் பொது மக்களும் என இந்த மக்கள் சந்திப்பில் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.



