Latestமலேசியா

இந்திரா காந்தியின் நீதிமன்ற அவமதிப்பு மனு தள்ளுபடி; ஐ.ஜி.பி.க்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி மறுப்பு

ஈப்போ, ஜூன்-26-தனது மகளை மீட்கவும், முன்னாள் கணவர் கே. பத்மநாதனை கைது செய்யவும் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தத் தவறியதாகக் கூறி, மலேசிய போலீஸ் படைத் தலைவர் தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி எம். இந்திரா காந்தி தாக்கல் செய்த மனுவை ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

நீதித்துறை ஆணையர் டத்தோ நோர்ஷிடா அவாங் இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, மனுவை செலவின உத்தரவு ஏதுமின்றி நிராகரித்தார்.

தீர்ப்பை வழங்கிய நீதித்துறை ஆணையர், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின்படி, புதிய தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், அவை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

“இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் பின்பற்றத் தவறியுள்ளனர் அல்லது மறுத்துள்ளனர் என்று முடிவு செய்ய முடியாது. ஏனெனில் நீதிமன்றம் உத்தரவிட்ட விசாரணை இன்னும் நிறைவடையவில்லை,” என்று அவர் கூறினார்.

விசாரணை முழுமையாக முடிவடையும் முன்பே இணக்கமின்மையை நிரூபிப்பது முன்கூட்டியே தீர்ப்பு வழங்குவதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புதிதாக வெளிவந்த தகவல்களை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படுவதற்கு முன்பே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

“எனவே, திட்டமிட்ட நீதிமன்ற அவமதிப்பை நிரூபிக்கும் முதற்கட்ட (prima facie) ஆதாரங்கள் எதுவும் இல்லை,” என்றார்.

கே. பத்மநாதன் ‘சாரா 100’ மற்றும் ‘புடி 95’ போன்ற அரசுத் திட்டங்களை பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்குவதற்குத் தேவையான முதற்கட்ட ஆதாரங்களாக அமையவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

அதேவேளை, தற்போதைய மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், நிலுவையில் உள்ள கைது உத்தரவை நிறைவேற்றுவதற்காக அனைத்து நியாயமான மற்றும் முனைப்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய தொடர்ச்சியான பொறுப்பு காவல்துறைக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இருப்பதாக நீதிமன்றம் வலியுறுத்தியது.

இது, ஐ.ஜி.பி. மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க இந்திரா காந்தி மேற்கொண்ட இரண்டாவது முயற்சியும் தோல்வியடைந்த நிகழ்வாகும்.

முன்னதாக, 2020 அக்டோபர் 28-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முதல் மனுவில், ஐ.ஜி.பி., மலேசிய அரச காவல்துறை (PDRM), உள்துறை அமைச்சு மற்றும் அரசாங்கம் ஆகியவை எதிர்மனுதாரர்களாக பெயரிடப்பட்டிருந்தன. அந்த மனுவும் 2022 ஆகஸ்ட் 2-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனு, இந்த ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2014 மே 30-ஆம் தேதி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, தனது மகளை மீட்டுக் கொண்டு வருவதிலும், முன்னாள் கணவர் கே. பத்மநாதனை கைது செய்வதிலும் காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறிவருவதாக இந்திரா காந்தி தனது மனுவில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!