Latestஉலகம்மலேசியா

இஸ்ரேலிய சர்ச்சை: மலேசியாவில் முதலீடுகளைத் தற்போதைக்கு நிறுத்துகிறது ‘Network School’ – தோற்றுனர் பாலாஜி ஶ்ரீனிவாசன்

கோலாலம்பூர், ஜூலை-17-மலேசியாவில் உள்ள ‘Network School’ கல்வி நிறுவனம், இஸ்ரேலியர்கள் குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, தங்களது எதிர்கால முதலீட்டுத் திட்டங்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

ஜோகூர், Forest City-யில் இயங்கி வரும் ‘Network School’-ல் இஸ்ரேலியப் பிரஜைகள் பங்கேற்பதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இருப்பினும், குடிநுழைவு இலாகா நடத்திய ஆய்வில், அங்குள்ள 40 நாடுகளைச் சேர்ந்த 266 வெளிநாட்டினரிடமும் முறையான ஆவணங்கள் இருப்பதும், இஸ்ரேலியர்கள் அங்கு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதும் உறுதிச் செய்யப்பட்டது.

​இந்த நிலையில், அந்நிறுவனத்தின் நிறுவனர் பாலாஜி சீனிவாசன் தனது ‘X’ தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே Forest City-யில் 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும், பல மலேசியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், திட்டமிட்டிருந்த 500 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான விரிவாக்கத் திட்டங்கள் உட்பட, புதிய முதலீடுகள் அனைத்தும், இதுபோன்ற சிக்கல்கள் மீண்டும் ஏற்படாது என்பதற்கு உரிய உறுதி கிடைக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மலேசியா தங்களது முதலீடுகளைத் தொடர்ந்து விரும்பினால், அரசாங்கத்துடன் முறையான ஒப்பந்தம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும், இல்லையென்றால் தங்களது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றிக்கொள்ளத் தயார் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!