
மலாக்கா, ஜூன்-30-உரிமம் இன்றி 35,000 லிட்டருக்கும் அதிகமான டீசல் வைத்திருந்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வங்காளதேச ஆடவனுக்கு ஆயர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆறு மாத சிறைத்தண்டனையும் 20,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட 42 வயதுடைய அல்டாப் அஜீஸ் கார்தார் (Altaf Aziz Kardar ) என்பவரின் முறையீடு, வழக்கின் முழு விவரங்கள் மற்றும் அரசுத் தரப்பு வாதங்கள் ஆகியவற்றை பரிசீலித்த பிறகு, நீதிபதி ராஜா நூர் அடில்லா ராஜா மஹ்யால்டின் (Raja Noor Adilla Raja Mahyaldin) இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாதால் அந்த நபர் அபராதத் தொகையை செலுத்தினான்.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதியன்று பிற்பகல் 3 மணியளவில், குருபோங் தொழிற்பேட்டையில் உள்ள ஜலான் PK 20-இல் அமைந்திருந்த கிடங்கு ஒன்றில், அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியலில் உள்ள 35,653 லிட்டர் டீசலைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக அல்டாப் அஜீஸ் மற்றும் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.



