
புத்ராஜெயா, ஜூன்-30-சொந்த சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை கற்பழித்த 42 வயது மெக்கானிக்கிற்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் 5 பிரம்படிகளையும் புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சிலாங்கூர், உலு லங்காட்டில் உள்ள ஒரு வீட்டில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்த வழக்கின் இறுதி மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் குழு, குற்றம் சாட்டப்பட்டவரின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
சம்பவத்தின் போது தான் மோட்டார் சைக்கிள் பட்டறையில் இருந்ததாகக் கூறி, தப்பிப்பதற்காகக் தற்காப்புத் தரப்பு ஜோடித்த பொய்க்காரணங்களை நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், பயம் மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாகவே பாதிக்கப்பட்ட சிறுமி போலீஸில் புகார் அளிக்க தாமதமானது என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து, குற்றவாளி உடனடியாகத் தனது சிறைத்தண்டனையை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனைக்கு பிறகு, அவர் தற்காலிகக் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்றும், அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனினும், முன்னதாக செஷன்ஸ் நீதிமன்றம் விதித்திருந்த 7,000 ரிங்கிட் இழப்பீட்டு உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.



