
கோலாலம்பூர், ஆகஸ்ட்.14- ஓய்வூதியம் பெறாத முன்னாள் காவல்துறை ஊழியர்களுக்கு மாதாந்திர வாழ்க்கைச் செலவுப்படி வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு PBPM எனும் மலேசிய முன்னாள் காவலர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைத்துள்ளது.
1972-ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 86,000 உறுப்பினர்களில் சுமார் 40,000 பேர் ஓய்வூதியம் பெறாத முன்னாள் காவல்துறை ஊழியர்கள். அவசர காலகட்டத்தில் சிறப்புப் படை, உள்நாட்டுப் பாதுகாப்புப் படை மற்றும் ஒப்பந்தக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றியவர்களும் அவர்களில் அடங்குவர் என PBPM தலைவர் Mokhtar Omar தெரிவித்தார்.
தங்களுடைய வழக்கமான வருமான ஆதாரத்தை இழந்த பின், அவர்களில் பலர் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்கப் போராடி வருகின்றனர். எனவே அவர்களின் நலன் பேணப்பட வேண்டும். தேசிய வீரர் சேவைப் பதக்கமான Pingat Jasa Pahlawan Negara (PJPN) பெற்றவர்களுக்கு, மாதம் 300 முதல் 500 ரிங்கிட் வரையிலான சிறப்பு செலவுபடி வழங்கப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், ‘காவல்துறை பாரம்பரிய அறக்கட்டளை நிதியின்’ (TAWP) உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட வரம்புகளை மேம்படுத்த வேண்டியதும் அவசியம் என்றாரவர்.
இதனிடையே, முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கு உதவும் நோக்கில் அக்டோபர் மாதம் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக Mokhtar Omar தெரிவித்தார். கார்ப்பரேட் துறை, பன்னாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளின் நலனில் அக்கறை கொண்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்கும் அந்நிகழ்ச்சியின் வழி 1 மில்லியன் நிதியைத் திரட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
திரட்டப்படும் நிதி, சங்க உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக மருத்துவ உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், பால், செவித்திறன் கருவிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்கப் பயன்படுத்தப்படும்.



