
கோத்தா பாரு, ஆகஸ்ட்-25-கிளந்தான், குவா மூசாங்கில் Kampung RKT Kesedar Chalil பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் நிகழ்ந்த கைகலப்பில் தோட்ட மேலாளர் ஒருவர் படுகாயமடைந்தார். அப்பகுதியில் வணிகத் தொடர்புள்ள நிறுவனமொன்றின் பிரதிநிதிகள் எனக் கருதப்படும் குழுவினர் அந்நபரைத் தாக்கியதாக குவா மூசாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் Sik Choon Foo தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் அக்குழுவினர் வனப்பகுதிக்குள் நுழைவதற்கான அனுமதிச் சீட்டுகள் குறித்து விளக்கம் கோரி வந்த போது மோதல் ஏற்பட்டது. அக்குழுவைச் சேர்ந்த இருவர் ஆடவர் ஒருவரைத் தாக்கிய நிலையில், அதனைத் தடுக்க குறுக்கிட முயன்ற தோட்ட மேலாளரை அவர்கள் கத்தி, இரும்புத் தண்டுகள் மற்றும் மரத்தடிகளைக் கொண்டு தாக்கியதாக Sik Chong Foo கூறினார்.
பாதிக்கப்பட்ட 35 வயது உள்ளூர் நபருக்கு இடது கையில் எலும்பு முறிவு, இடது கால் எலும்பில் விரிசல், இடது கால் தசைநார் பாதிப்பு, இடது கண்ணைச் சுற்றி சிராய்ப்பு, வீக்கம், மற்றும் மூக்கில் ரத்தப்போக்கு உள்ளிட்ட பலத்த காயங்கள் ஏற்பட்டது.
அச்சம்பவம் தண்டனைச் சட்டம் 326 மற்றும் 148-வது பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே தேவையற்ற ஆரூடங்களை பரப்ப வேண்டாம். அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்லலாம் அல்லது Paloh காவல் நிலையத்தை 09-928 5090 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



