
செர்டாங், ஆகஸ்ட்-30,பயனீட்டாளர்களுக்கு நியாயமான மற்றும் தகுந்த விலையை உறுதிச் செய்வதோடு, சந்தையில் முட்டைகளின் விநியோகம் தடையின்றித் தொடர்வதை உறுதிச் செய்யும் வகையில் அரசாங்கம் தற்போது கோழி முட்டை விலைகளை மறுஆய்வு செய்து வருகிறது.
விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு அதனைத் தெரிவித்தார்.
மானியங்கள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சந்தை நிலவரங்களையும் உற்பத்திச் சூழலையும் அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் சொன்னார்.
முட்டை விலையேற்றம் காண்பதற்கான காரணங்களை ஆராய, தமதமைச்சும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN-னும் கோழிப் பண்ணையாளர்கள் உட்பட துறை சார் நிறுவனங்களைச் சந்தித்து பேசியிருப்பதாகவும் மாட் சாபு கூறினார்.
நியாயமற்ற விலையேற்றத்திலிருந்து பொது மக்களின் நலன்களைப் பாதுகாக்க, தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, உற்பத்திச் செலவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலவரங்களை முழுமையாக மதிப்பிட்டு வருவதாக, சிலாங்கூர் செர்டாங்கில் ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ என்ற பிரச்சார இயக்கத்தைத் தொடக்கி வைத்தப் பிறகு அமைச்சர் கூறினார்.
பயனீட்டாளர்களின் வாங்கும் சக்திக்கும், தொழில்துறையின் நிலைத்தன்மைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் வகையிலேயே எத்தகைய கொள்கை மாற்றங்களும் அமையும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மோசமான தரத்திலான தீவனம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக முட்டை உற்பத்தி குறைந்ததன் விளைவாக, கடந்த 3 வாரங்களில் சில்லறை முட்டை விலை 5 முறை உயர்ந்துள்ளதாக, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் முட்டை வியாபாரிகள் சங்கம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



