
புத்ராஜெயா, ஜூலை-22 – நாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோத வெளிநாட்டு வணிகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் முடிவுச் செய்துள்ளது.
இதனால் உள்ளூர் தொழில்துறையினர் பாதிக்கப்படுவதாக பொருளாதாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
பொருளாதார அமைச்சர் அக்மால் நசீர் தலைமையில் நடைபெற்ற ‘Pemudah’ எனப்படும் வணிக எளிமைப்படுத்தலுக்கான சிறப்புப் பணிக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, இணக்கம், கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த அமுலாக்கம் ஆகிய 3 முக்கிய யுக்திகளைக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
விசா மற்றும் கடப்பிதழ்களைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நடத்தப்படும் வணிகங்கள், உள்நாட்டு வர்த்தகர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதை அமைச்சு சுட்டிக்காட்டியது.
மேலும், முறைகேடான வணிக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தத் தேவையான புதிய சட்டங்கள் அல்லது தற்போதைய விதிகளில் திருத்தங்கள் கொண்டுவருவது குறித்தும் அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
போட்டித்தன்மைக்கான உலகத் தர வரிசையில் மலேசியா முன்னேறி வரும் நிலையில், உள்ளூர் வர்த்தகர்களுக்கு நியாயமான சூழலை உறுதிச் செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் எற நேற்று வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு கூறிற்று.



