Latestமலேசியா

சமய நல்லிணக்கத்திற்கு மலேசியா ஒரு உலகளாவிய முன்மாதிரி: அமைச்சர் ஏரன் பெருமிதம்

கோலாலாம்பூர், ஜூன்-12-சமய நல்லிணக்கத்திற்கும் உள்ளடக்கிய ஆட்சிமுறைக்கும் மலேசியா உலகளாவிய முன்மாதிரியாகத் திகழ்கிறது.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற சமயத் தலைவர்களின் 3-ஆவது அனைத்துலக மாநாட்டில் உரை நிகழ்த்திய போது, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் அவ்வாறு பெருமிதம் தெரிவித்தார்.

மலேசியாவின் 3 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பன்முகத்தன்மை கொண்ட மக்கள் மத்தியில் நிலவும் அமைதியான வாழ்வு, தற்செயலானது அல்ல; அது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் இந்த ஒற்றுமை, கூட்டரசு அரசியல் சாசனம் மற்றும் ருக்குன் நெகாரா தேசியக் கோட்பாட்டின் 5 முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டது என அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய சமூக ஊடகப் பிரிவினைகளும் தவறான தகவல்களும் சவாலாக இருக்கும் இக்காலக் கட்டத்தில், இக்கோட்பாடுகள் நாட்டுக்கு ஒரு சிறந்த நெறிமுறை வழிகாட்டியாக விளங்குவதாகவும் அவர் கூறினார்.

சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்த, ‘புரிந்துகொள்ளுதல், மதித்தல், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் கொண்டாடுதல்’ ஆகிய அமைச்சின் 4 முக்கிய வழிகாட்டி நெறிமுறைகளை அவர் வலியுறுத்தினார்.

பிரிவினைகளை விடுத்து கலந்துரையாடலைத் தேர்ந்தெடுக்கும்போது, உலக அரங்கில் அமைதியான நல்வாழ்வு சாத்தியமே எனக்கூறி அமைச்சர் தமது உரையை நிறைவுச் செய்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!