
கோலாலம்பூர், நவ- 3 –வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டு அனுமதி தொடர்பாக 1.097 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள முன்னாள் மனிதவள அமைச்சர் எம். சரவணனுக்கு எதிரான வழக்கு விசாரணை, அடுத்தாண்டு மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான தேதிகளை கோலாலம்பூர் sessions நீதிமன்றம் இன்று நிர்ணயித்தது.
இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, மார்ச் 4, ஏப்ரல் 12, மே 24 முதல் 27 வரை, ஆகஸ்ட் 17 முதல் 19 வரை மற்றும் ஆகஸ்ட் 23 முதல் 25 வரை விசாரணை நடைபெறும். அரசுத் தரப்பு 25 சாட்சிகளை அழைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், ஜனவரி 15, 2027க்குள் தற்காப்பு அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சரவணன் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசுத் தரப்பு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 51A-இன் கீழ் தொடர்புடைய 31 பக்க ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தற்காப்புத் தரப்பு உறுதிப்படுத்தியது. விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என்று சரவணன் தரப்பு வலியுறுத்தியிருந்தது.
2022ஆம் ஆண்டு ஜூன் 16 மற்றும் ஜூலை 7ஆம் தேதிகளில், பங்சாரில் உள்ள Bukit Jalil Golf & Country Resorts மற்றும் Jalan Telawi 3 ஆகிய இடங்களில், Vectica Resources நிறுவன இயக்குநரிடமிருந்து மற்றொருவர் மூலம் சரவணன் முறையே 150,000 ரிங்கிட் மற்றும் 350,000 ரிங்கிட் ரொக்கமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. TYKB Engineering நிறுவனத்தின் 1,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டு விண்ணப்பத்தை அங்கீகரிக்கச் செய்ய வெகுமதியாக அப்பணம் வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதே நோக்கத்திற்காக மீண்டும் 597,000 ரிங்கிட்டை காசோலை மூலம் பெற்றதாகவும் சரவணன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்தொகை 2022 ஜூலை 7ஆம் தேதி Taman Desaவில் உள்ள Maybank Islamic வங்கிக் கிளையில், நிறுவனமொன்றின் கணக்கில் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், லஞ்சத் தொகையின் ஐந்து மடங்குக்குக் குறையாத அல்லது 10,000 ரிங்கிட் அபராதம், இவற்றில் அதிகமான தொகை விதிக்கப்படலாம்.



