
கோலாலம்பூர், ஜூன்-8-செரம்பானில் உள்ள தனது குடும்ப வீட்டின் பின்புறம் உள்ள ஒரு ஸ்டோர் அறையில் வாரக் கணக்கில் அடைத்து வைக்கப்பட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு அளிக்கப்பட்டு, உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு 9 வயது சிறுமி உள்ளானதைத் தொடர்ந்து அவரது வளர்ப்புத் தாயை போலீசார் கைது செய்தனர்.
தாமான் துவாங்கு ஜாபாரில் உள்ள ஒரு வீட்டில் இந்த துன்புறுத்தல் நடப்பதாக அதிகாரிகளுக்கு புகார் கிடைத்ததைத் தொடர்ந்து , கைக்குழந்தையாக இருந்தபோதே தத்தெடுக்கப்பட்ட அந்தச் சிறுமி நேற்று இரவு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பள்ளி விடுமுறை நாட்கள் முழுவதும் அந்தச் சிறுமி வீட்டின் பின்புறம் உள்ள பூட்டப்படாத ஸ்டோர் அறையில் தங்கவைக்கப்பட்டு , கழிப்பறையைப் பயன்படுத்த மட்டுமே வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட பிறகு மீண்டும் ஸ்டோர் அறையில் தங்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளார்.
இரவில் உணவு திருடியது உள்ளிட்ட சிறு குற்றங்களுக்காக, பாதிக்கப்பட்ட சிறுமி தனது வளர்ப்புத் தாயால் அடிக்கடி திட்டப்பட்டும், தாக்கப்பட்டும் வந்துள்ளார் என நேற்று இரவு மணி 7.22 க்கு இந்தச் சம்பவம் குறித்து போலீசிற்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, விசாரணை தொடங்கப்பட்டதாக செரம்பான் மாவட்ட போலீஸ் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமட் யாத்திம் ஒஸ்மான் ( Mohd Yatim Osman) கூறினார்.
அதிகாரிகள் அந்தச் சிறுமியைக் கண்டுபிடித்தபோது, அவளது தோள்பட்டையிலும் வலது கன்னத்திலும் கீறல் காயங்கள் இருப்பதைக் கண்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி இரவு 9.30 மணிக்கு காவல்துறையினரால் மீட்கப்பட்டு துவாங்கு ஜாபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 46 வயது பெண் மீது 2001 ஆம் ஆண்டின் சிறார் சட்டத்தின் பிரிவு 31 1 (a) இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



