
கோலாலம்பூர், செப்டம்பர் 23 –சிறார் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான காணொளிகளைச் சிறுவர்களே தயாரித்து, இணையத்தில் விற்பனை செய்து வந்த அதிர்ச்சித் தகவல், காவல்துறையின் ‘Op Pedo 3.0’ சிறப்பு நடவடிக்கையில் அம்பலமாகியுள்ளது.
இந்த நடவடிக்கையில் 13 வயது சிறுமி உட்பட எட்டுச் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சிறுவர்களில் சிலர், பாலியல் ரீதியான அனிமேஷன் காணொளிகளைத் தாங்களாகவே தயாரித்து, இணையத்தில் விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இத்தகைய காணொளிகள் ஒவ்வொன்றும் RM50 முதல் RM60 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணப் பரிவர்த்தனைகள் மின்னணுப் பணப்பை, PayPal மற்றும் Touch ‘n Go உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்பட்டதாகக் குமார் கூறினார்.
கடந்த செப்டம்பர் 14 முதல் 16ஆம் தேதி வரை, மலேசிய அரசக் காவல்துறையும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமும் இணைந்து நாடு முழுவதும் இந்தச் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.
இதில் 13 முதல் 56 வயதுக்குட்பட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 52 பேர் மலேசியர்கள்; ஒருவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்.கைது செய்யப்பட்ட எட்டுச் சிறுவர்களில் ஏழு பேர் ஆண்கள்; ஒருவர் பெண்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட சிறுவர்களின் இணைய நடவடிக்கைகள் குறித்து அவர்களது பெற்றோர்கள், கைது நடவடிக்கைக்குப் பின்னரே அறிந்துகொண்டதாகக் குமார் தெரிவித்தார்.
மேலும், சிறுவர்கள் எவ்வாறு இத்தகைய பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களுக்கு அறிமுகமானார்கள் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்ட எட்டுச் சிறுவர்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் முழுமைப்படுத்தப்பட்ட பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைக்காகச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதுபோன்ற வழக்குகளில் சிக்கியுள்ள சிறுவர்களுக்கு உதவ காவல்துறையில் ஆலோசகர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட குமார், சட்ட அமலாக்க நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வு முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.



